ஆஸ்திரிய வெளிவிவகார அமைச்சின் இணையம்மீது சைபர் போர் தொடுப்பு: பின்னணியில் ரஷ்யா?
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் கடந்த வாரம் ஹேக் செய்யப்பட்டுள்ளதுடன், அமைச்சக ஊழியர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விபரங்கள் அடங்கிய தரவுகள் பார்வையிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், சைபர் பாதுகாப்பு ஊடுருவலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது குறித்து அமைச்சகம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை.
வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் வெளிப்புற சேவை வழங்குநரால் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், நவம்பர் 12 மற்றும் 13ஆம் திகதிகளுக்கு இடையில் அங்கீகரிக்கப்படாத வகையில் இணையதளத்துக்குள் நுழைந்துள்ளதாக அமைச்சகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய மைக்ரோசொப்ட் சேவை முடக்கம் ஏற்பட்டிருந்த காலப்பகுதியிலேயே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 13ஆம் திகதி ஹேக்கிங் சம்பவம் கண்டறியப்பட்டதுடன், உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நிபுணர் குழுவின் விசாரணையில், அமைச்சகத்தின் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் பெயர்கள், பணித் தொடர்பு விபரங்கள் அடங்கிய தரவுகள் பார்வையிடப்பட்டமை தெரியவந்துள்ளது.
இந்த சைபர் தாக்குதலுக்குப் பின்னால் எந்த நாடு அல்லது தரப்பினர் உள்ளனர் என்பது குறித்து ஆஸ்திரியா குறிப்பிடவில்லை.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இராணுவ ரீதியாக நடுநிலை நாடாக இருந்தாலும், 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஆஸ்திரியா உக்ரைனுக்கு அரசியல் ரீதியாக ஆதரவளித்து வருகிறது.
2019ஆம் ஆண்டு இறுதி மற்றும் 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பானது என கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரியா குற்றம் சாட்டியிருந்தது.
ரஷ்யாவின் தீங்கிழைக்கும் சைபர் நடவடிக்கைகளைக் கண்டித்து, மேலும் எட்டு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் அப்போது ரஷ்யாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.
எனினும், மேற்கத்திய நாடுகள் முன்வைக்கும் ஹேக்கிங் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
இதேவேளை, இராஜதந்திர அந்தஸ்துக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த காலங்களில் ஆஸ்திரியா ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளது. பொதுவாக இத்தகைய குற்றச்சாட்டுகள் உளவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன.
கடந்த மாதம் மேலும் நான்கு ரஷ்யர்களை ஆஸ்திரியா வெளியேற்றியதையடுத்து, 2020ஆம் ஆண்டு முதல் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்யர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா அப்போது தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, நான்கு நாட்களுக்குப் பின்னர் மொஸ்கோவில் உள்ள ஆஸ்திரிய தூதரகத்தில் பணியாற்றிய வர்த்தக பிரதிநிதி ஒருவரை ரஷ்யா வெளியேற்றியதாக ஆஸ்திரியா தெரிவித்துள்ளது.

