மாவீரர் நினைவேந்தல் கொட்டகையை அகற்ற பொலிஸார் முற்பட்டதால் யாழில் பரபரப்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகையைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த புஷ்பாகர், தயாபரன், சுரேந்திரன், நிமலன் மற்றும் நிலங்கதன் ஆகிய ஐவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸார் அந்த நினைவேந்தல் கொட்டகையை அகற்றத் தொடங்கினர் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்குத் திரும்பிய ஏற்பாட்டுக் குழுவினர், அதே இடத்தில் மீண்டும் கொட்டகையை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகையை மீண்டும் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



