இந்தியா செய்தி

ஒருதலைக் காதலால் விபரீதம்; பெண் பிரபலத்தின் வீட்டிற்குள் புகுந்த இளைஞர் கொலை

இந்தியாவின் டெல்லியில், சமூக ஊடகப் பிரபலமான பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர், குடும்பத்தினர் மற்றும் அயலவர்களின் தாக்குதலுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அயலவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் 6 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள குறித்த பெண், அண்மையில் தனது நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தொடர்பான காணொளிகளை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரைச் சேர்ந்த அபினவ் என்ற இளைஞர், கடந்த நவம்பர் 7ஆம் திகதி கிழக்கு டெல்லியின் மதுவிஹார் பகுதியில் அமைந்துள்ள குறித்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அவர் மது அருந்தியிருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் அவரைத் தாக்கியதாகவும், பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், முதுகு மற்றும் வலது பாதத்தில் கடுமையான காயங்களுடன் காணப்பட்ட இளைஞரை மீட்டு, ராஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த நவம்பர் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளில், அபினவ் குறித்த பெண்ணின் சமூக ஊடகப் பதிவுகளைத் தொடர்ந்து பார்த்து வந்ததுடன், அவர் மீது ஒருதலைப்பட்சமாக காதல் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ரசிகராக சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றிருந்த அவர், பெண்ணின் திருமணம் வேறொருவருடன் நடைபெறவிருந்ததால் அதிருப்தியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அபினவ் யார் என்பது குறித்து குறித்த பெண்ணுக்கு எவ்வித அறிமுகமும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கொலைக்குச் சமமான குற்றச்செயல் (Culpable Homicide) தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், பெண்ணின் தந்தை மற்றும் அயலவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் தொடர்புடைய ஏனையவர்களையும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி