கானாவை விரட்டியது கொலம்பியா
அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில், ஜோன் ஆரியாஸ் (Jhon Arias) அடித்த ஒரேயொரு கோல் உதவியுடன் கானா அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி , கொலம்பியா அடுத்த சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில், மாற்று வீரராகக் களம் புகுந்த லூயிஸ் சுவாரெஸ் , கொடுத்த கிராஸை (Cross) ஜோன் ஆரியாஸ் மிக லாவகமாகக் கோலாக மாற்றினார்.
அதைத்தொடர்ந்து கொலம்பியா அணியின் கட்டுக்கோப்பான தடுப்பாட்டம் கானாவின் கோல் முயற்சிகளை முறியடித்தது.
இந்த வெற்றியின் மூலம் நெஸ்டர் லோரென்சோவின் (Nestor Lorenzo) தலைமையிலான கொலம்பியா அணி தனது தோல்வியே இல்லாத பயணத்தைத் தொடர்வதுடன், அடுத்த சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்ளவும் தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக, குரூப் சுற்றில் போர்ச்சுகல், உஸ்பெகிஸ்தான் மற்றும் காங்கோ குடியரசு ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியே அடையாமல் ‘குரூப் கே’ பிரிவில் முதலிடம் பிடித்திருந்த போதிலும், கொலம்பியா பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காமல் அமைதியாகவே நகர்ந்து வந்தது.
வெள்ளிக்கிழமை நடந்த இப்போட்டியின் 8-வது நிமிடத்தில், கொலம்பியா வீரர் ஜோன் கோர்டோபாவுக்கு ஏற்பட்ட இடுப்புப் பகுதி காயம் காரணமாக அவர் வெளியேற நேரிட்டது.
அவருக்குப் பதிலாக லூயிஸ் சுவாரெஸ் களம் இறக்கப்பட்டார்.
ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சுவாரெஸ் உதைத்த பந்தை, கானா வீரர்களின் கவனத்தைத் திசைதிருப்பி அங்கே தனியாக நின்றுகொண்டிருந்த ஆரியாஸ், பந்தை மிக நேர்த்தியாக கோல் கம்பத்தின் கீழ் மூலைக்கு அனுப்பி அணியை முன்னிலைப்படுத்தினார்.
2014-ல் கால்இறுதி வரை சென்றதே கொலம்பியாவின் சிறந்த சாதனையாக உள்ள நிலையில், அவர்கள் தங்களின் அடுத்த சுற்றில் வரும் செவ்வாய்க்கிழமை வான்கூவரில் (Vancouver) சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.





