சிக்கலான மருத்துவ வழக்குகளில் மருத்துவர்களை விட திறம்பட செயல்படும் AI தொழில்நுட்பம்
மருத்துவர்களைப் போலவே நோயாளிகளைப் படிப்படியாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவி ஒன்று, திறம்பட செயல்படுவதாக மைக்ரோசாஃப்ட் Microsoft ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த AI கருவியானது சிக்கலான மருத்துவ வழக்குகளைக் கையாள்வதில் மருத்துவர்களை விட சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 22 அன்று ‘சயின்ஸ்’ (Science) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி இந்த AI மாதிரியானது ஒரு ‘ஆர்கெஸ்ட்ரேட்டர்’ (orchestrator – ஒருங்கிணைப்பாளர்) மூலம் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று இணைந்து நோயறிதல் சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற ஒரு சூழலை உருவகப்படுத்தி, AI எவ்வாறு ஒரு சிக்கலை அணுக வேண்டும் என்பதைத் திட்டமிட்டு ஒருங்கிணைபதாக கூறப்படுகிறது.
மேலும் நோயாளியிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும், என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இது தீர்மானிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வுக்குத் தலைமை தாங்கியவர்கள்,
தற்போதுள்ள மருத்துவ AI மாதிரிகள் பொதுவாக, நோயாளியின் அனைத்து அறிகுறிகள், ஆய்வக முடிவுகள் மற்றும் மருத்துவப் படங்கள் (imaging studies) ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்து நோயைக் கண்டறியும் முறையைப் பின்பற்றுகின்றன.
இந்த ‘ஆர்கெஸ்ட்ரேட்டர் ‘orchestrator மூலம், நோயறிதலை எட்டுவதற்கான படிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன்படி, இந்த AI மாதிரி முதலில் நோயாளியின் மருத்துவ வரலாறு குறித்து என்ன கேட்க வேண்டும் மற்றும் உடல் பரிசோதனையில் எவை முக்கியமானவை என்பதைத் தீர்மானிக்கிறது.
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், எந்தெந்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதன் முடிவுகளை ஆய்வு செய்த பிறகு, தேவைப்பட்டால் கூடுதல் பரிசோதனைகளையும் பரிந்துரைக்கிறது.
இந்தச் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும், அது தனது தற்போதைய அனுமானங்களையும் திட்டங்களையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளனர்.




