இலங்கை செய்தி

வவுனியா மாநரசபையில் நிர்வாக் சீர்கேடு: ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாநகர சபையின் நிர்வாகச் சீரின்மை, அதிகார துஷ;பிரயோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் தூர்வாருதலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்காக, ஆளுநரால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் தனிநபர் விசாரணை ஆணைக்குழுவாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த விசாரணை ஆணைக்குழுவின் விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்:

திருநாவற்குளம் கழிவுநீர் வாய்க்கால் முறைகேடு மற்றும் கொடுப்பனவு நிறுத்தம்:

திருநாவற்குளம் பிரதான கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளும் சட்ட ஏற்பாடுகளை மீறியுள்ளமை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வேலைக்குரிய கொடுப்பனவைக் கோரிச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை எனவும், சபை ஏகமனதான தீர்மானத்துக்கு அப்பாற்பட்டுத் தனிநபரின் சொந்த விருப்பத்துக்கு அமையவே இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சட்டவிரோதமான இந்த வேலைத்திட்டத்துக்குரிய எந்தவொரு கொடுப்பனவையும் மாநகர சபையின் நிதியிலிருந்து வழங்க வேண்டாம் என ஆளுநரால் திட்டவட்டமாகக் கட்டளையிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத காணிப் பகிர்வு, நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் திருத்த பரிந்துரைகள்:

வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணி, சட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாது வியாபாரிகளுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளமை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமைச்சரின் அனுமதி பெறப்படாமை, சபைத் தீர்மானம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டமை, அரச பெறுகை நடைமுறைகள் பின்பற்றப்படாமை மற்றும் ஒப்பந்தங்கள் இன்றி காணி வழங்கப்பட்டமை போன்ற கடுமையான மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதனையடுத்து, விசாரணை அறிக்கையில் பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

சட்டவிரோதமாக வழங்கப்பட்ட காணித்துண்டுகள் தொடர்பான நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

காணி வழங்கும் செயற்பாடுகள் அனைத்தும் சட்ட விதிமுறைகள் மற்றும் சபைத் தீர்மானங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இடம்பெயர்க்கப்பட வேண்டிய சூழலில், முன்னுரிமை அடிப்படையில் மற்றும் சட்டப்பூர்வமான முறையில் மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து ஒப்பந்தங்களும் உரிய அதிகாரிகளின் கையொப்பங்களுடன் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மாநகர சபைக்கு உரிய வருவாய்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு அறவிடப்பட வேண்டும்.

மேலும், மேற்கண்ட முறைகேடுகளின் காரணமாக, சட்டபூர்வமற்ற முறையில் வழங்கப்பட்ட காணித்துண்டுகளில் உள்ள வியாபாரிகளிடமிருந்து மாநகர சபையால் அறவிடப்பட்டு வரும் வியாபார வரிகளை உடனடியாக நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கௌரவ ஆளுநரின் இந்த உத்தரவுகளுக்கமைவாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் அவர்கள், வவுனியா மாநகர சபை ஆணையாளருக்கு இன்று (28.04.2026) விசேட எழுத்துமூல பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன்படி, கௌரவ ஆளுநரால் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!