மேற்கு ஆசியப் போரில் 23 இந்தியர்கள் பலி: அதிர்ச்சித் தகவல்
ஓமான் கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மேற்கு ஆசியாவில் இடம்பெற்று வரும் மோதல்களில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 பேர் மாலுமிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் லிமா (Limah) கடற்பகுதிக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த இந்தியக் கொடியுடன் கூடிய எம்.எஸ்.வி. அல் ஜுசுபி (MSV AL JUSUFI) என்ற சரக்குக் கப்பல் மீது கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 2) அடையாளம் காணப்படாத வான்வழிப் பொருள் தாக்கியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்திய மாலுமிகள் 14 பேருடன் பயணித்த குறித்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதை இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 13 மாலுமிகள் பாதுகாப்பாகக் கப்பலிலிருந்து வெளியேறி, ஓமான் கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கந்தர் நஹிம் அஜிஜ் (Gandhar Nahim Ajij) என்ற மாலுமி படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
ஓமானின் லிமா கடற்பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சு, பதற்றத்தை உடனடியாகத் தணித்து, இராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச கடல் வழிகளில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், கருங்கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் இதுவரை ஐந்து இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மோதல் நிலவும் பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து இதுவரை 4,330 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்தியக் கொடியுடன் கூடிய எட்டு கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் உள்ளதாகவும், அவற்றில் ஆறு கப்பல்கள் அப்பகுதியில் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உரங்களை ஏற்றிச் செல்லும் வெளிநாட்டுக் கொடியுடன் கூடிய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




