பாகிஸ்தான் சிறைகளில் நிலவும் நெரிசல் – அவசர சீர்த்திருத்திற்கு அழைப்பு
பாகிஸ்தான் சிறைகளில் நிலவும் நெரிசலைக் கையாள்வதற்காக, குற்றவியல் நீதி அமைப்பில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை அவசரமாகச் செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
புதிய சிறைகளைக் கட்டுவதன் மூலம் மட்டும் தீர்க்கக்கூடிய ஒரு எளிய பிரச்சனை இதுவல்ல என்றும், மாறாக இது நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் தோல்வியின் அறிகுறி என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 2024-ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, பாகிஸ்தான் சிறைகள் அவற்றின் கொள்ளளவை விட 152 சதவீதம் அதிகமான கைதிகளைக் கொண்டிருந்தன.
மேலும், இத்தகைய நெரிசலானது, மோசமான சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள், தொற்று நோய்கள் பரவுதல், மனநலப் பிரச்சினைகள் மோசமடைதல், வன்முறை அதிகரித்தல், மற்றும் கைதிகளின் மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை இழத்தல் போன்ற கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது என்பதையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நெருக்கடிக்குத் தீர்வாகப் புதிய சிறைகளைக் கட்டுவதை அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தாலும், சிறைகளுக்குள் இருந்து கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்று மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது.




