நேபாளத்தை நோக்கி இந்தியாவின் அடுத்த நகர்வு: சீனாவுக்கு கடிவாளம்
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, அந்நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்தி தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததுடன், 5,200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். வீதிகள், பாலங்கள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
இந்தப் பேரிடரைத் தொடர்ந்து முதலில் அவசர நிவாரண உதவிகளை வழங்கிய வெளிநாடாக இந்தியா விளங்கியது. இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் மறுகட்டமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் திட்டங்களுக்காக 1.62 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியுதவித் திட்டத்தையும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக இந்தியா சென்றுள்ள நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவின் முதலாவது இருதரப்பு வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது இருதரப்புப் பயணம் இதுவாகும்.
நேபாளத்தின் மறுகட்டமைப்புக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா அறிவித்துள்ள நிதியுதவித் திட்டம், நேபாளத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு நிதியுதவியாகும்.
கடந்த பத்தாண்டுகளாக எல்லைப் பிரச்சினைகள் மற்றும் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட முற்றுகை தொடர்பான அதிருப்தி காரணமாக இந்தியா – நேபாள உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கிடையில், வர்த்தகம், உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வந்துள்ளது.
நேபாளத்தில் சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் இந்த நிதியுதவியும் நிவாரண நடவடிக்கைகளும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த உதவக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பிராந்திய வல்லரசுகளுடனும் சமநிலையான உறவைப் பேணுவதற்கு நேபாளம் முயற்சித்து வருகிறது.
நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா, இந்தியாவை நம்பகமான அண்டை நாடாக வர்ணித்துள்ளதுடன், கல்வி, செய்மதித் தொடர்பாடல் மற்றும் நிலையான நகர அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.




