மரண தண்டனைக்கு எதிராக இருவரும் மேன்முறையீடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட இரண்டு உயர்மட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், தங்கள் தண்டனைத் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் இரண்டு வாரங்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார்கள் என்று, சட்டத்தரணி சமிந்த அதுகோரள ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் கொலை செய்வதற்கான நோக்கம் இல்லை என்பதையும், குண்டுவெடிப்புகளை நடத்திய உண்மையான குற்றவாளிகளுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், இந்த மாறுபட்ட தீர்ப்பு விளக்கியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
76 வயதான ஹேமசிறி பெர்னாண்டோவும், 66 வயதான பூஜித் ஜயசுந்தரவும் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.




