பிரான்ஸில் போன்று இந்தியாவிலும் போராட்டம் வெடிக்குமா?
இந்தியா , பங்களாதேஷோ அல்லது பிரான்ஸோ அல்ல எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், நாட்டில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்காக வன்முறையைத் தூண்டுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணைக்குழுவின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை (SIR) தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
திங்கட்கிழமை (19) செய்தி நிறுவனமான ANI-க்கு கருத்துத் தெரிவித்த சசி தரூர், பிரான்ஸில் இடம்பெற்றதைப் போன்ற வன்முறைகளைத் தமது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது எனக் குறிப்பிட்டார்.
பேருந்துகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்குத் தீ வைப்பது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அமைதியான போராட்டங்களையே ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி கவலை
வாக்காளர் பட்டியலிலிருந்து பெருமளவிலானோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சசி தரூர், தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை சிக்கலானதும், முறைகேடுகள் நிறைந்ததும், ஓரளவு சட்டவிரோதமானதுமான செயல்முறை என விமர்சித்தார்.
இந்தச் செயல்முறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்தார்.




