இந்திய கிரிக்கெட் அணி தெரிவுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில், மேற்கு வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தேர்வுக் குழுவின் தலைவராக பிரக்யான் ஓஜா பொறுப்பேற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்ச்பே ஆகியோர் ரமேஷ் பவாரைத் தேர்வு செய்துள்ளனர்.
முன்னாள் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் ஒக்டோபர் 4ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தேர்வுக் குழுவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்காக முன்னாள் இந்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வாசிம் ஜாபர் உள்ளிட்டோரும் பரிசீலிக்கப்பட்டிருந்தனர்.
மும்பையைச் சேர்ந்த வலதுகை சுழற்பந்து வீச்சாளரான ரமேஷ் பவார், 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 31 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2015ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இரு வெவ்வேறு காலப்பகுதிகளில் பணியாற்றினார். அவரது பயிற்றுவிப்பின் கீழ் இந்திய மகளிர் அணி ஆசியக் கிண்ணத்தை வென்றதுடன், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது.
மேலும், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்குப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ள அவர், பிசிசிஐயின் சிறப்பு பயிற்சி மையத்திலும் (Centre of Excellence) பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகச் சேவையாற்றியுள்ளார்.
பிரக்யான் ஓஜா தேர்வுக் குழுத் தலைவரானது ஏன்?
இந்திய ஆடவர் அணியின் தேர்வுக் குழுத் தலைவர், சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தின் அடிப்படையில் மூத்த வீரர்களிலிருந்து நியமிக்கப்படுகிறார். இதில் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரக்யான் ஓஜா, அஜித் அகர்கரின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வுக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
2025ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் தேர்வுக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றிவரும் ஓஜாவுடன், சிவ் சுந்தர் தாஸ், ஆர்.பி. சிங் மற்றும் அஜய் ரத்ரா ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அகர்கரின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் இடைக்காலத் தலைவராகச் செயல்பட்ட ஓஜா தலைமையிலான குழுவே, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் எதிர்வரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டித் தொடர்களுக்கான அணிகளையும் தேர்வு செய்திருந்தது.




