22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சபதம்
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு ஜனநாயக வழியில் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிரணி மேற்கொள்ளும்” என்று சட்டத்துறை பேராசிரியரும் முன்னாள் அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மிகவும் ஆபத்தானது. அது பாரிய பாதக விளைவுகளையே ஏற்படுத்தும். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது மட்டுமல்லாமல், இது ஏனைய பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.
எதிர்காலத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் என்பவற்றைக்கூட நீடிப்பதற்கு அரசாங்கம் முற்படக்கூடும்.
இவ்விடயம் தொடர்பாகச் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக மகாநாயக்க தேரர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
ஆனால், அந்த அழுத்தமான கடிதம் குறித்து அரசாங்கம் இதுவரையில் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்போதைக்குத் தேவையில்லை என்பதே மகாநாயக்க தேரர்களின் உறுதியான கருத்தாக உள்ளது.
அரசமைப்பில் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதத்தை அரசாங்கம் மூடிமறைப்பது ஏன்?” என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.




