ட்ரம்பின் இழப்பீட்டு கோரிக்கை திட்டத்தால் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் முட்டுக்கட்டை
அமெரிக்கா போர் இழப்பீடு வழங்கினால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்க முடியும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ள நிலையில், ஈரானால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்களுக்காக அந்நாட்டிடமிருந்து அமெரிக்கா இழப்பீடு பெற வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறப்பு பற்றி பேச்சுகள் இடம்பெற்றுவரும் நிலையில், ட்ரம்ப் இந்த கோரிக்கையை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் தொடர்பான ஈரானின் பிடியை இது மேலும் வலுப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் ஏற்படுத்திய சேதங்களுக்காக 50 ஆண்டுகால இழப்பீட்டைத் தங்கள் நிர்வாகம் கோரவுள்ளதாகவும், டெஹ்ரானின் கோரிக்கைக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்னதாக உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் ஐந்திலொரு பங்கு கடந்து சென்ற ஹோர்முஸ் நீரிணையை, அமெரிக்கா போர் இழப்பீடு வழங்கி பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே மீண்டும் திறக்க முடியும் என ஈரான் கூறியிருந்தது.
கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமையவே ஈரானின் இந்த கோரிக்கைகள் அமைந்திருந்தன.
இரு நாடுகளையும் பிரிக்கும் இந்த நீரிணை குறித்து ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், டிரம்பின் இந்த புதிய இழப்பீட்டுக் கோரிக்கை கடல் வழியை மீண்டும் திறக்கும் முயற்சிகளிடைய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
“அவர்கள் இழப்பீடு அல்லது நாங்கள் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பணம் கேட்டதாக நீங்கள் கூறலாம். நான் அது ஒரு நல்ல யோசனை என்று கூறினேன்,” என்று செய்தியாளர்களிடம் கூறிய டிரம்ப், “அப்படியானால், கடந்த 50 ஆண்டுகளில் அவர்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கு நாங்களும் பணம் கேட்கப் போகிறோம்” என்றார்.
இப்பகுதியில் கொல்லப்பட்ட அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகள் மற்றும் ஈரானில் நடந்த பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்காகவும் இந்த இழப்பீடுகள் கோரப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், கடந்த நான்கு மாதங்களில் ஈரானில் 52,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் உரிமை கோரினார். இருப்பினும், அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் வெடித்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் 3,117 பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் டெஹ்ரான் தெரிவிக்கிறது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் செய்தி முகமை’ (HRANA) பெப்ரவரியில் வெளியிட்ட அறிக்கையில், 6,500 போராட்டக்காரர்கள் உட்பட சுமார் 7,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தது.




