வங்காள விரிகுடாவில் வழுவடையும் தாழமுக்கம் -புயல் தொடர்பில் எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்போது வட அகலாங்கு 15.3° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 89.7° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது.
இந்த வளிமண்டலத் தொகுதியானது தொடர்ந்து மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று (26) வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் சூறாவளியாக (cyclonic storm) மேலும் வலுவடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (27) வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் தீவிர சூறாவளியாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் கணித்துள்ளது.
இந்த வளிமண்டலத் தொகுதியால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதனுடன் தொடர்புடைய காற்று வீச்சு இலங்கையின் குறுக்கே நீடிப்பதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, மேல், சபரகமுவ, தெற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




