எகிப்து துறைமுக சேமிப்பு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை புதன்கிழமை இரவு நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியிலுள்ள டாமியேட்டா (Damietta) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த அமெரிக்காவுக்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் (gas storage tanker) மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பிரித்தானிய கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே (Ambrey) தனது முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவித்தது.
எகிப்தின் பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை உறுதிப்படுத்திய போதிலும், ட்ரோன் தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தொடக்கத்தில் உறுதியளித்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை இரவே ஈரான் மீது இந்த அமெரிக்கத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில்(Strait of Hormuz) உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் ஒரே இரவில் உறுதிப்படுத்தியது.
மேலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு முக்கியமான கப்பல் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை இணைந்து நிர்வகிப்பது தொடர்பாக ஓமன் முன்வைத்த திட்டத்தையும் ஈரான் நிராகரித்துள்ளது.



