உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும்: ரஷ்யா பறந்தார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் Steve Witkoff, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை புதன்கிழமை சந்திக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக, நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமைந்ததாக அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் நோர்வே மற்றும் பின்லாந்து தலைவர்களுடன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுடன் நேரடி முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளையும், பரந்த அளவிலான பலதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுப்பதற்கான வழியை உருவாக்குவதே ஸ்டீவ் விட்காபின் நோக்கம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான உறவைச் சீரமைக்க முயற்சி
அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சீரமைக்கும் நோக்கில் ஸெலென்ஸ்கி ஒஸ்லோவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்யாவுடன் நெருக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வரும் நிலையில், வாஷிங்டனுக்கும் கீவுக்கும் இடையிலான உறவுகள் அண்மைக் காலமாக மேலும் மோசமடைந்துள்ளன.
உக்ரைனுக்குத் தேவையான முக்கிய இராணுவ உதவிகளையும் உளவுத் தகவல்களையும் அமெரிக்கா வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்குப் பின்னரும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் முன்னதாகத் தொலைபேசியில் உரையாடிய பின்னரும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகள் மீண்டும் உக்ரைனுக்குக் கிடைத்து வருவதாகக் கூறினார்.
நேட்டோவின் 5ஆவது பிரிவுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம்
உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பின் 5ஆவது பிரிவுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ஆலோசித்ததாகக் குறிப்பிட்ட அவர், அந்த உத்தரவாதங்கள் வலுவானதாக இருக்கும் என அமெரிக்கத் தரப்பு மீண்டும் உறுதியளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
நேட்டோவின் 5ஆவது பிரிவின்படி, உறுப்பு நாடொன்றின் மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் பங்கேற்கும் முத்தரப்புச் சந்திப்பொன்றை நடத்தி, போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முக்கிய விடயங்களை விவாதிக்க உக்ரைன் விரும்புவதாகவும் ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.




