வாகனத் தாக்குதலில் படுகாயம்: ஆஸ்திரேலிய எம்.பியின் இரு கால்களும் அகற்றம்
ஆஸ்திரேலிய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸின் (Helen Haines) இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளதாக அவரது கணவர் Phil Haines உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற வாகனத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஹெலன் ஹெய்ன்ஸின் வலது காலை காப்பாற்ற முடியும் என குடும்பத்தினர் நம்பியிருந்த போதிலும், சத்திரசிகிச்சை நிபுணர்கள் அதனையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பில் ஹெய்ன்ஸ், “ஹெலனின் வலது காலை காப்பாற்ற முடியும் என நாங்கள் நம்பியிருந்தோம். எனினும், இன்று காலை அல்லது பிற்பகல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் அவரது வலது காலையும் அகற்ற வேண்டியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், “இவை அனைத்துக்கும் மத்தியில் கிடைத்துள்ள நல்ல செய்தி என்னவென்றால், ஹெலன் உயிருடன் இருக்கிறார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அதுவே மிக முக்கியமான விடயமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹெலன் ஹெய்ன்ஸின் தேர்தல் தொகுதி அலுவலகத்திற்கு வெளியே, தனது லேண்ட் க்ரூஸர் (LandCruiser) வாகனத்தை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 43 வயதுடைய விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்த பிரெண்டன் நியூஜென்ட் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




