ஈரான் மீது அமெரிக்கா மீளவும் தாக்குதல்
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் பனாமா கொடி ஏற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஈரானின் இராணுவக் கண்காணிப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள், ஆளில்லா விமானச் சேமிப்புத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்கும் திறன்கள் தொடர்பான இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய கட்டளை மையத்தின்படி, இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.
மறுபுறம், ஈரானிய ஊடகங்களின்படி, சார்க் மற்றும் கெஷ்ம் ஆகிய இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க்கில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கோபுரம் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சனிக்கிழமை காலை அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அத்தாக்குதலை முறியடித்ததாகக் கூறிய ஈரான், பதிலடியாக அப்பகுதியில் உள்ள பல அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியதாகவும் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




