ஈரான் போரால் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக தகவல்!
ஈரான் போர் தொடர்வதால் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கவலைகள் எழுந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் ஸ்டீவ் ஃபைன்பெர்க் (Steve Feinberg) எழுதியுள்ள குறிப்பாணை ஒன்றில், “முக்கியமான திறன்களுக்கான விநியோக அட்டவணைகளை வேகமாகவும், தீவிரமாகவும் செயல்படுத்துவதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும்” திட்டங்களைச் சமர்ப்பிக்க, துறையின் தலைவர்களுக்கு 21 நாட்களுக்கு மேல் அவகாசம் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் தொழில் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை இந்தக் குறிப்பாணை அடிகோடிட்டுக்காட்டுகிறது.
தற்போது கேபிடல் ஹில்லில் பரிசீலனையில் உள்ள 2027 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் கூறப்படுகிறது.




