பாலஸ்தீன ஆதரவு நிகழ்வு: சுவீடன் கல்வியாளருக்கு பிரித்தானியாவுக்குள் நுழையத் தடை
பாலஸ்தீன ஆதரவு நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா செல்லவிருந்த சுவீடன் கல்வியாளரும் காலநிலை ஆய்வாளருமான அன்ட்ரியாஸ் மல்முக்கு (Andreas Malm) அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் அவரது பிரசன்னம் “பொதுநலனுக்கு உகந்ததல்ல” எனக் குறிப்பிட்டு, அவரது மின்னணு பயண அனுமதியை (ETA) அந்நாட்டு உள்துறை அமைச்சு இரத்துச் செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை இந்த முடிவு தொடர்பான மின்னஞ்சல் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் பிரித்தானிய சோசலிச இதழான Tribune ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில், பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ள Palestine Action அமைப்பின் இணை நிறுவனர் ஹூடா அம்மோரியும் பங்கேற்கவிருந்தார்.
தனது பயண அனுமதி இரத்துச் செய்யப்பட்டதற்கு, குறித்த நிகழ்வில் பங்கேற்கவிருந்ததே காரணம் என அன்ட்ரியாஸ் மல்ம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சிடம் விளக்கம் கோரியுள்ள போதிலும், இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாகத் தொடர்ச்சியாகப் பிரித்தானியாவுக்குச் சென்று வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பலஸ்தீனம் தொடர்பான தனது நிலைப்பாட்டை எப்போதும் வெளிப்படையாகத் தெரிவித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.




