வடகொரியாவின் அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடி: தென்கொரியா எச்சரிக்கை
வடகொரியாவின் எல்லை அத்துமீறல்களுக்கு எதிராக, நாட்டின் இராணுவ எல்லையைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வீ சுங்-லாக் தெரிவித்துள்ளார்.
வடகொரியா தனது எல்லைப் பகுதியில் மட்டுமே நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறினாலும், எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளுக்கு தென்கொரியா உறுதியான பதிலளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் இரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவமயமற்ற வலயத்தில் (DMZ) இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தென்கொரிய இராணுவத்தினர் பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த வெடிப்புக்குக் காரணம் வடகொரியா புதைத்த கண்ணிவெடி என தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த கண்ணிவெடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, எல்லைப் பகுதியில் வடகொரியா முன்னெடுத்து வரும் பாதுகாப்பு அரண் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறும் தென்கொரியா கோரியுள்ளது.
எனினும், கண்ணிவெடித் தாக்குதலுக்குத் தமது நாடே காரணம் என்ற குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது. மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங், ஒக்டோபர் மாத இறுதிக்குள் தென்கொரியாவுக்கு எதிரான பிரசார ஒலிபெருக்கிகளை முழு எல்லைப் பகுதியிலும் செயல்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
ஆனால், வடகொரியா இதுவரை அவ்வாறான ஒலிபரப்புகளை ஆரம்பிக்கவில்லை என தென்கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் கடந்த காலங்களில் இத்தகைய ஒலிபெருக்கிகளை உளவியல் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




