நெருக்கடிக்குள் உலக வர்த்தக ஒழுங்கு; மாற்றுத் தீர்வுடன் ஐரோப்பிய ஒன்றியம்
சுதந்திர வர்த்தகம் மற்றும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வர்த்தக ஒழுங்கு நெருக்கடிக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கான சிறந்த மாற்றுத் தீர்வுகளை உருவாக்குவதில் ஐரோப்பிய ஒன்றியம் தலைமைப் பங்காற்றும் என ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்கொரிய தலைநகர் சியோலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய–பசிபிக் ஜெர்மன் வர்த்தக மாநாட்டில் உரையாற்றிய அவர், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புகளை நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச வர்த்தகத்தின் ஊடாகவே பல நாடுகள் செழிப்படைந்துள்ளன. எனவே, அந்த வர்த்தக முறையை கைவிடுவதற்கு அவை விரும்பவில்லை என்றும் மெர்ஸ் தெரிவித்தார்.
விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட உலகப் பொருளாதார ஒழுங்கைப் பாதுகாத்து மேலும் மேம்படுத்துவதற்காக, ஐரோப்பாவிலும் ஏனைய பிராந்தியங்களிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட ஜேர்மனி தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் வர்த்தக வரிகள் மற்றும் சீனாவின் அரச ஆதரவுடனான தொழில்துறை விரிவாக்கம் தொடர்பான கவலைகளுக்கு மத்தியில், ஆசியப் பயணத்தை மேற்கொண்டுள்ள மெர்ஸ், பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியூங்கைச் சந்தித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளார்.
ஜேர்மனி மற்றும் தென்கொரியாவின் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒற்றுமைகள், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதாக மெர்ஸ் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மின்சாரம், எரிசக்தி மற்றும் உயிரியல் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக, இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்களும் அமைப்புகளும் ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தென்கொரிய தொழில்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.




