நெதன்யாகுவைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைக் கோரும் துருக்கி
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பைக் கோரப்போவதாக துருக்கி அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற ஆர்வலர்கள் மீதான தாக்குதல் தொடர்பான உள்நாட்டுக் குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் மிகக் கடுமையான விமர்சகர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
மேலும், அங்கு நடக்கும் போர் தொடர்பாக நெதன்யாகுவிற்கு எதிராக இதற்கு முன்னர் உள்நாட்டுக் கைது வாரண்டுகளையும் பிறப்பித்திருந்தது.
இருப்பினும் துருக்கி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்
ரெட் நோட்டீஸ் Red notice என்பது, நாடு கடத்தப்படும் வரை ஒருவரைக் கண்டுபிடித்து தற்காலிகமாகக் கைது செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள காவல் படைகளுக்கு விடுக்கப்படும் ஒரு கோரிக்கையாகும்.
ரெட் நோட்டீஸ்களை வெளியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு, உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை இன்டர்போல் மதிப்பாய்வு செய்யும்.




