மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்படும் 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வு
மாகாண சபைகளினால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மாகாண மட்டத்தில் தற்போது 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய அரசும் மாகாண சபைகளும் ஒரே கொள்கையின் கீழ், தங்களது துறைசார்ந்த எல்லைக்கு உட்பட்ட திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய கொள்கைகளின் அடிப்படையில் வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவது மத்திய அரசுக்குரிய பொறுப்பாகும் என்றும், அதனடிப்படையில் செயற்திட்டங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது மாகாண சபைகள் மட்டத்தில் நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு திட்டங்கள் இரட்டிப்பாவதைத் தவிர்ப்பதற்காக அரச பொறிமுறையில் தரவுகளும் தகவல்களும் திறம்படப் பரிமாறப்படுவதோடு, முறையான ஒருங்கிணைப்புடன் அது இடம்பெற வேண்டும் எனவும், இதன் மூலம் தேவையற்ற திட்டங்களுக்கு வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவசியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் வாய்ப்புக்கிடைக்கும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதி உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்களை வெற்றியடையச் செய்து, உரிய காலத்தில் அவற்றை நிறைவுசெய்வதுடன், அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
கடும் நிதி ஒழுக்கத்தைப் பேணி, உரிய செலவீன எல்லைக்குள் செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த ஆண்டுக்கான பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிக்கக் கூடிய வகையில் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து வேலைத் திட்டங்களின் திட்டமிடல்களையும் பூர்த்தி செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.
கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாகாண சபைகள் ஆகிய 3 நிறுவனங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன மறுசீரமைப்புப் பணிகள் தேசிய மட்டத்திலான ஒருங்கிணைந்த திட்டத்திற்கமைய செயற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், பல்வேறு வெளிவாரித் திட்டங்களின் கீழ் பரந்துபட்டிருக்கும் குளங்களின் புனரமைப்புப் பணிகளை ஒரே மத்திய நிலையத்திற்குக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள எல்-நினோ நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக, சிறு போகத்திற்குப் பின்னர் பெரும் போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் உள்ள குறுகிய காலத்தில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன் அவற்றை உடனடியாக புனரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி முன்னுரிமையாகக் கருதி அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைக் கட்டமைப்பை மீள ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தவிர்ப்பதாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.




