‘நியூ மெக்சிகோ’ இனி ‘நியூ அமெரிக்கா’? – டிரம்ப்பின் யோசனைக்கு கடும் எதிர்ப்பு
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘லேபர் டே’ (Labor Day) விடுமுறை தினத்தின் தொடக்கத்தில், நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்றுவதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் மீம்களைப் (memes) பகிர்ந்துள்ளார்.
திங்களன்று, நியூ மெக்சிகோவின் நிலப்பரப்பை ‘நியூ அமெரிக்கா’ என்று பெயர் மாற்றி சித்தரிக்கும் பல அமெரிக்க வரைபடங்களை டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமையன்று பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , இந்த மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான ஆலோசனைகள் தமக்கு வந்துள்ளதாகவும், அந்த யோசனை தமக்கு பிடித்துள்ளதாகவும் கூறினார்.
“அந்த அற்புதமான மாநில மக்களுக்கு இது மிகவும் மதிப்புமிக்கதாகவும் அழகாகவும் இருக்கும். வாவ், நான் இதை விரும்புகிறேன்!!!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கடந்த மாதம் Lake Ontario ஏரியின் பெயரை ‘லேக் அமெரிக்கா’ (Lake America) என மாற்ற டிரம்ப் முடிவெடுத்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவமும் நடந்துள்ளது.
இருப்பினும், ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கு அமெரிக்க கூட்டாட்சி அரசுக்கு (U.S. federal government) எந்த அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ மெக்சிகோ மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மிஷெல் லூஜான் கிரிஷம் (Michelle Lujan Grisham) பொறுப்பிலுள்ளார். ஜனவரி 1, 2019 முதல் அப்பதவியில் இருக்கும் அவர், 2022 ஆம் ஆண்டிலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர், “நியூ மெக்சிகோவின் பெயர் விவாதத்திற்குரியது அல்ல — அமெரிக்கா உருவாவதற்கு முன்பிருந்தே இந்தப் பெயர் நமக்குச் சொந்தமானது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.




