பல நாடுகள் மீது 100% சுங்கவரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது, அமெரிக்க நிறுவனங்கள் மீதான பாரபட்சமான வரிவிதிப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இட்டுள்ள பதிவில், அத்தகைய வரியை விதிக்கும் எந்தவொரு நாடும் கடுமையான வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளதோடு, அந்த நாடுகள் 100 சதவீத சுங்க வரியை எதிர்கொள்ளம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட இந்த சுங்கவரியானது, அந்த நாடுகளுடனான தற்போதைய அல்லது எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களைச் செல்லாததாக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த சுங்கவரியானது, அந்த நாட்டுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள், அவை செயல்படுத்தப்பட்டிருந்தாலும், கையெழுத்திடப்பட்டிருந்தாலும் அவற்றை செல்லாததாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்ஃபபெட், மெட்டா, அமேசான் மற்றும் ஆப்பிள் போன்ற முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை நியாயமற்ற முறையில் குறிவைப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் இந்த எச்சரிக்கை முதன்மையாக ஐரோப்பிய நாடுகளைப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகள் பெரிய பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவைகள் வரிகளைத் தொடர்ந்து விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




