எகிப்து வரலாற்று சாதனை – ஈரானுக்கு ஏமாற்றம்
எகிப்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.
இந்த ஆட்டத்தின் மூலம் எகிப்து அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
‘குரூப் G’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள எகிப்து அணி, அடுத்த சுற்றில் (Round of 32) ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
3-வது இடத்தைப் பிடித்துள்ள ஈரான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
குரூப் ஜே, கே மற்றும் எல் (Groups J, K, L) ஆகிய பிரிவுகளில் நடக்கும் மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே, சிறந்த 8 ‘மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் அணிகளில்’ ஒன்றாக ஈரான் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியுமா என்பது தீர்மானிக்கப்படும்.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எகிப்து அணிக்குச் சாதகமாக முதல் கோல் விழுந்தது.
நட்சத்திர வீரர் முகமது சலாஹ் அடித்த பந்தை ஈரான் கோல்கீப்பர் அலிரேசா பெய்ரான்வந்த் தடுத்த போதிலும், அருகில் நின்ற மஹ்மூத் சாபர் (Mahmoud Saber) அதை மிக எளிதாகக் கோலாக மாற்றினார்.
ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஈரானின் மெஹ்தி தாரெமி பெனால்டி வாய்ப்பைப் பெற்றார். ஆனால், அவர் அடித்த பந்தை எகிப்து கோல்கீப்பர் முஸ்தபா ஷோபீர் (Mostafa Shobeir) மிகச் சிறப்பாகத் தடுத்தார்.
எனினும், அடுத்த சில நிமிடங்களில் எகிப்து கோல்கீப்பர் தடுத்த மற்றொரு பந்தை, ஈரானின் ரமின் ரெசாயியன் (Ramin Rezaeian) மிகக் கடினமான கோணத்தில் இருந்து கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.
இரண்டாம் பாதியில் எகிப்து அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்த போதிலும், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Stoppage-time) ஈரானின் ஷோஜா கலில்சாதே பந்தை வலைக்குள் தள்ளி கோல் அடித்தார்.
இந்த கோல் நடுவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் ஈரான் அணி எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இட முன்னேற்றத்தைப் பெற்றிருக்கும்.
ஆனால், ‘வார்’ (VAR) தொழில்நுட்ப சோதனையில் அந்த கோல் Offside என நடுவரால் மறுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஈரானின் சயீத் எசடோலாஹி அடித்த பந்தையும் எகிப்து கோல்கீப்பர் ஷோபீர் தடுத்து நிறுத்த, ஆட்டம் சமநிலையில் முடிவுக்கு வந்தது.




