கொல்கத்தாவை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
கொல்கத்தாவின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தாவின் சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் நேற்று பலத்த மழை காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலத்த மழையின் போது மக்கள் கூட்டம் திடீரென முண்டியடித்த காரணத்தால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த கொல்கத்தா காவல்துறையினர், அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளைப் சேகரித்து பெற்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து, தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியவர் மீது கடுமையான நடவடிக்கையும் துவங்கி உள்ளது.
இச்சம்பவத்தில் இதுவரை 12 பேரை தங்கள் காவலில் எடுத்துள்ள பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பூஜை கமிட்டி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், காவல்துறையினர், தற்காலிக ஊர்க்காவல் படையினர் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று ( 18) மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறவிருந்த தனது நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளார். காயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக அவர் இன்று மருத்துவமனைக்குச் செல்கிறார்.




