திரையரங்கில் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் கண்டுப்பிடிப்பு
கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹன்வெல்ல வீதியில் உள்ள ஒரு திரையரங்கில் பொலிஸார் திடீர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மில்லத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் (repeater) ரக துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12-போர் (12-bore) ரக துப்பாக்கி, 398 எண்ணிக்கையிலான 12-போர் ரக தோட்டாக்கள், 278 எண்ணிக்கையிலான 16-போர் ரக தோட்டாக்கள், .32 ரக துப்பாக்கிக்கான 49 தோட்டாக்கள், அதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 3,083 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCD) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




