அலாஸ்காவில் கப்பல் மோதியதால் நேர்ந்த துயரம் – அழிந்து வரும் கர்ப்பிணி திமிங்கலம் உயிரிழப்பு
அலாஸ்காவில் ரோயல் கரீபியன் நிறுவனத்தின் கப்பல் ஒன்று, கர்ப்பிணியான பெண் திமிங்கலத்தின் மீது மோதியதில் அந்த உயிரினம் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விலங்கு நல ஆர்வலர்கள் கப்பல்களின் வேகத்தை குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த பெண் திமிங்கலம் அழிந்து வரும் ஃபின் திமிங்கல ( fin whale) வகையைச் சேர்ந்ததாகும்.
கூட்டாட்சி அதிகாரிகள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், கப்பல் மோதியதால் ஏற்பட்ட பலத்த காயங்களால் திமிங்கலம் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றப்படி குறித்த திமிங்கலம் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களைத் தடுப்பதற்காக, திமிங்கலங்களின் வாழ்விடங்களில் கப்பல்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வேகத்தை மணிக்கு 10 நாட்டிக்கல் மைல்களாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உயிரியல் பன்முகத்தன்மைக்கான மையம் (Center for Biological Diversity) ரோயல் கரீபியன் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக NOAA-வுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், கடல்சார் சூழல் அமைப்புகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் ராயல் கரீபியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.





