போலந்தை நோக்கி நகரும் வெப்ப அலை – ஐரோப்பிய மக்கள் பரிதவிப்பு
ஐரோப்பா முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பல நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய மக்கள் இன்றைய தினமும் (27) கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டனர்.
பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்த வெப்ப அலை தற்போது போலந்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றமே இத்தகைய தீவிர சூழலுக்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
பருவநிலை மாற்றம் இல்லாதிருந்தால் இத்தகைய வெப்ப அலை சாத்தியமே இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
“இந்த வார இறுதியில் ஜெர்மனியின் சில பகுதிகளில் வெப்ப அலை அதன் உச்சத்தைத் தொட்டு, 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும்” என்று வானிலை முன்னறிவிப்பு தளத்தின் வானிலை ஆய்வாளர் கார்ஸ்டன் பிராண்ட் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமையன்று ஆர்ஹஸ் (Aarhus) நகருக்கு வடக்கே 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்துள்ளது.
இது 1874 ஆம் ஆண்டு முதல் முறையாக அளவிடத் தொடங்கியதில் இருந்து பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.
பிரான்சில் வெப்ப அலையினால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 40 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.




