வியட்நாமில் பாண் உட்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு – பலர் வைத்தியசாலையில்!
வியட்நாமின் குவாங் ட்ரி (Quang Tri ) மாகாணத்தில் உணவு விஷமாகியமை காரணமாக குறைந்தது 64 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளுர் பேக்கரி ஒன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை காலை முதல் அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, சோர்வு மற்றும் நீரிழப்பு போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் வரத்தொடங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு நரம்பு வழி திரவங்கள், வாய்வழி நீரேற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் சீரான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் சம்பந்தப்பட்ட பேக்கரி வீட்டு வணிகப் பதிவுச் சான்றிதழைப் பெற்றிருந்ததாகவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதாக உறுதியளித்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகிக்கப்படும் விஷ பாதிப்பிற்கான காரணத்தைக் கண்டறிய, அந்த பேக்கரியிலிருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை பேக்கரியின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





