இந்தியா – சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த ஆண்டு பெரும்பகுதியில் எச்சரிக்கையுடன் மீளமைக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய சில நாட்களில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் அந்த முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட பலவீனமானதாக இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பிரதேசம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய முரண்பாட்டுக்குரிய விடயமாக இருந்து வருகிறது.
2020ஆம் ஆண்டு இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து, உறவுகளில் ஏற்பட்டிருந்த இணக்கமான சூழல் தற்போது மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் பொலிஸாரின் தலைவரான சத்ருஜீத் சிங் கபூர் வெளியிட்ட கருத்துகளே தற்போதைய சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன. இவ்வாண்டின் தொடக்கத்தில், இமயமலைப் பகுதியில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளுக்கு சீனப் படையினர் பெருமளவில் மீண்டும் நுழைந்து, இந்தியா உரிமை கோரும் பிரதேசத்திற்குள் பல கிலோமீற்றர் தூரத்தில் கூடாரங்களை அமைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோ – திபெத்திய எல்லைப் பொலிஸ் படையின் (ITBP) பணிப்பாளர் நாயகமான சத்ருஜீத் சிங் கபூரின் இந்தக் கருத்துகள், இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பொதுவாக, பதவியில் இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் இவ்வாறான கருத்துகளைப் பகிரங்கமாக வெளியிடுவது அரிதாகும். உணர்வுபூர்வமான எல்லைப் பிரச்சினைகள் தொடர்பான கருத்துகள் பொதுவாக மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அல்லது வெளிவிவகார அமைச்சுகள் ஊடாகவே வெளியிடப்படுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற அதிகாரிகள் சந்திப்பொன்றில் உரையாற்றிய கபூர், வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் பல இடங்களில் இந்திய மற்றும் சீனப் படையினருக்கு இடையில் நேருக்கு நேர் மோதல்கள் இடம்பெற்றதாகவும், அவை தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல்கள் ஜூலை மாதம் ஆரம்பமானதாகவும், ஆரம்பத்தில் இரு தரப்புப் படையினரும் பின்வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சில நாட்களுக்குப் பின்னர் சீனப் படையினர் அதிக எண்ணிக்கையில் மீண்டும் அப்பகுதிக்குத் திரும்பி, “உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) தொடர்பில் இந்தியா கருதும் எல்லைக்குள் சுமார் ஆறு முதல் ஏழு கிலோமீற்றர் தூரத்தில்” கூடாரங்களை அமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக நீடிக்கும் எல்லைப் பிரச்சினை
உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) என்பது இந்தியா மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைப் பிரிக்கும் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோடாகும். சுமார் 3,440 கிலோமீற்றர் நீளமான இந்தச் சர்ச்சைக்குரிய எல்லை தொடர்பில் இரு நாடுகளும் பல தசாப்தங்களாக முரண்பட்டு வருகின்றன.
அருணாசலப் பிரதேசம் தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என சீனா உரிமை கோருகிறது. எனினும், அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனத் தெரிவித்து, சீனாவின் உரிமைக் கோரிக்கையை இந்தியா தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.
1947ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அதற்குப் பின்னர் தீர்க்கப்படாமல் தொடர்ந்த முக்கிய சவால்களில் ஒன்றாக இந்த எல்லைப் பிரச்சினை அமைந்தது.
இந்தப் பிரச்சினை 1962ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் குறுகிய கால எல்லைப் போர் இடம்பெறுவதற்கும் வழிவகுத்தது. அந்தப் போரில் இந்தியா கடுமையான தோல்வியைச் சந்தித்தது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகக் கடந்துள்ள போதிலும், எல்லையின் பெரும்பகுதி இன்னமும் முறையாக வரையறுக்கப்படவில்லை. இதனால், இரு நாடுகளும் ஒரே பிரதேசத்தின் மீது ஒன்றுக்கொன்று முரண்பட்ட பிராந்திய உரிமைக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
நிலப்பரப்பின் சவால்களும் படையினருக்கு இடையிலான மோதல்களும்
இப்பகுதியின் கடினமான நில அமைப்பும் எல்லையைத் தெளிவாக வரையறுப்பதில் பெரும் சவாலாக உள்ளது. ஆறுகளின் பாதைகள் மாறுதல், ஏரிகள் மற்றும் பனியால் மூடப்பட்ட மலைச் சிகரங்கள் போன்ற இயற்கை அம்சங்கள், துல்லியமான எல்லைக் கோட்டை நிர்ணயிப்பதைச் சிக்கலாக்குகின்றன.
இதன் காரணமாக, இரு நாடுகளின் படையினரும் எல்லைப் பகுதியில் நேருக்கு நேர் சந்திக்கும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் இத்தகைய சந்திப்புகள் வன்முறை மோதல்களாக மாறுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திரப் பதற்றங்களையும் உருவாக்குகின்றன.




