அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் – அர்ச்சுனாவுக்கு யாழ் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.
தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தனக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதாக அர்ச்சுனா தெரிவித்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் அவருக்கும் சாதாரண பொதுமகனுக்கும் ஒரே சட்டமே பொருந்துமென்றும், யாருக்கும் எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப முடியாதென்றும் தெரிவித்துள்ளது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் வைத்தியர் கிருசாந்திக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதில், அர்ச்சுனா இனிமேல் குறிப்பிட்ட வைத்தியருக்கு எதிராகவோ- வேறு யாருக்கும் எதிராகவோ ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பக்கூடாது என்றும், இதுவரை வைத்தியர் தொடர்பாக பரப்பிய அவதூறு வீடியோக்களை உடனடியாக தனது சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.




