ராகுல் காந்தியின் பேரணிக்கு வர்த்தகர்கள் எதிர்ப்பு; ஒத்திவைக்குமாறு சோனியாவிடம் கோரிக்கை
டெல்லியில் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட அரசியல் பேரணியை ஒத்திவைக்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தியிடம் டெல்லி வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் பேரணி காரணமாக டெல்லியின் முக்கியமான 20 வர்த்தகச் சந்தைகளில் நாளொன்றுக்கு நடைபெறும் 10,000 முதல் 12,000 கோடி இந்திய ரூபா வரையிலான வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லியின் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Chamber of Trade and Industry – CTI) சார்பில் அதன் தலைவர் பிரிஜேஷ் கோயல், சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் பேரணிக்கு சுமார் 10 இலட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 15,000 முதல் 20,000 வரையிலான வாகனங்கள் டெல்லியின் மத்திய பகுதிக்குள் வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய டெல்லி மற்றும் பழைய டெல்லியின் முக்கிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வர்த்தகப் பொருட்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படக்கூடும் என வர்த்தக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தீபாவளி விற்பனை பாதிக்கப்படும் அபாயம்
எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி தன்தேரஸ் (Dhanteras) பண்டிகையும், நவம்பர் 8ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையும் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான வர்த்தக நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இவ்வாறான முக்கியமான வர்த்தகக் காலப்பகுதியில் பேரணி நடத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் சந்தைகளுக்குச் செல்வதிலும், வர்த்தகப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும் சிரமங்கள் ஏற்படக்கூடும் என வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ராம்லீலா மைதானத்தில் எதிர்பார்க்கப்படும் ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்குப் போதிய வாகனத் தரிப்பிட வசதிகள் இல்லை என்றும், சுமார் 200 பெரிய பேருந்துகளைக்கூட நிறுத்துவதற்குப் போதுமான இடவசதி அங்கு இல்லை என்றும் CTI தெரிவித்துள்ளது.
இதனால் ஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ஆம் திகதிகளில் டெல்லியின் வர்த்தகப் பகுதிகளில் முடக்கநிலையை ஒத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேரணியை ஒத்திவைக்க மாற்றுத் திகதியும் பரிந்துரை
இந்தப் பேரணியை நவம்பர் 10 அல்லது 11ஆம் திகதிக்குப் பின்னர் நடத்துமாறு வர்த்தக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அல்லது, பேரணியை ஒத்திவைக்க முடியாத பட்சத்தில், அதிகளவான வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகளைக் கொண்ட புராரி (Burari) மைதானத்துக்கு நிகழ்வை மாற்றுமாறும் பரிந்துரைத்துள்ளது.
இந்தக் கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் பேரணிக்கு எதிரானது அல்ல என்றும், தீபாவளிக் காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே வர்த்தகர்களின் பிரதான நோக்கம் என்றும் CTI தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் சுமார் 20 இலட்சம் வர்த்தகர்களின் சார்பில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பேரணியை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்திக்கும் வர்த்தக அமைப்பு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது சோனியா காந்தியின் தலையீட்டையும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




