ரஷ்யாவிற்கு ஆதரவாக செயற்படும் சமூக ஊடக தளங்கள் – போலந்து எச்சரிக்கை
சமூக ஊடகத் தளங்கள் “டிஜிட்டல் போரில்” ரஷ்யாவின் “அமைதியான கூட்டாளியாக” செயல்படுகின்றன என்று போலந்து குற்றம் சாட்டியுள்ளது.
தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த அவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சர் க்ஷிஷ்டோஃப் காவ்கோவ்ஸ்கி Krzysztof Gawkowski இன்று இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அரசின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெவளியிட்டுள்ள அவர், “ரஷ்யாவுடன் ஒரு டிஜிட்டல் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு முனையும் உள்ளது.
இந்த முனையில், ரஷ்யாவின் போட்களுக்கும் (bots) கிரெம்ளினின் உளவு அமைப்பான GRU-க்கும் ஒரு அமைதியான கூட்டாளியாகச் சமூக ஊடகத் தளங்கள் செயல்படுகின்றன” என்று காவ்கோவ்ஸ்கி கூறினார்.
போலந்தும் பிற மேற்கத்திய நாடுகளும், சமூகத்தில் பிளவை ஏற்படுத்தவும், அமைதியைக் குலைக்கவும் ரஷ்யா தவறான தகவல்களைப் பரப்புவதாகப் பலமுறை குற்றம் சாட்டியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மொஸ்கோ, மேற்கத்திய தலைவர்கள் தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தலை வேண்டுமென்றே மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று கூறுகிறது.




