இலங்கையில் கடும் வறட்சி: 73 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
இரத்தினபுரி, அம்பாறை உட்பட நாட்டின் ஐந்து மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 73,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 8,783 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 33,023 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2,386 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிவேகமாகக் குறைவடைந்துள்ளது.
இதனால் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகிக்கும் வேலைத்திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ மையம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.




