காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி நீடிப்பு
காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணியை மலேசியா மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.
விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் மர்மங்களில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகின்றது.
239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, 2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது.
விமானத்தில் இருந்த பயணிகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பேர் சீன நாட்டவர்கள் ஆவர்.
மற்றவர்களில் மலேசியா, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டினரும், அத்துடன் இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டினரும் அடங்கியிருந்தனர்.
விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக நீண்ட தேடுதல் வேட்டை நடந்தபோதிலும், அந்த விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடல்சார் ஆய்வு ஒப்பந்தம் 2027 ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும் என்றும், அந்தக் காலகட்டத்தில் ஓஷன் இன்ஃபினிட்டி என்ற கடல்சார் ஆய்வு நிறுவனத்துடனான தற்போதைய ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளும் நடைமுறையில் இருக்கும் என்றும் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் ‘கண்டுபிடிக்கவில்லை என்றால் கட்டணம் இல்லை’ என்ற ஒரு நிபந்தனையும் இடம்பெறும்.
அதன்படி, விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், நிறுவனத்திற்கு எதுவும் பணம் செலுத்தப்படாது. மாறாக, அவை கண்டுபிடிக்கப்பட்டால், 70 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும்.
ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் 2018ம் ஆண்டில் அந்த விமானத்தைத் தேடியிருந்தது என்பதும், அவுஸ்திரேலியா தலைமையிலான மூன்றாண்டுத் தேடுதல் நடவடிக்கை 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எந்தப் பலனும் இன்றி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.




