மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் காகித ஆலைக்கு விற்பனை: இருவர் கைது
அரசாங்க பாடசாலைகளுக்கு விநியோகிக்க வேண்டிய 19,892 பாடப்புத்தகங்களை, உரிய விநியோக நிலையங்களில் ஒப்படைக்காமல், பழைய காகிதங்களை அரைக்கும்தொழிற்சாலைக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான இப்புத்தகங்கள், வெறும் 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரம் 01 (தமிழ் மொழி) பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள 12 விநியோக நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தன.
இதற்காக, கடந்த மே மாதம் 4ஆம் திகதி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலிருந்து குறித்த புத்தகத் தொகுதியைப் பொறுப்பேற்று, பியகம – சமுர்த்தி மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு கொண்டு செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், திட்டமிட்டபடி குறித்த பாடநூல்கள் எந்தவொரு விநியோக நிலையத்திற்கும் சென்று சேரவில்லை. இது தொடர்பாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவரால், கடந்த 12ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அதனடிப்படையில், புத்தகங்களை ஏற்றிச்சென்ற 31 வயதுடைய சாரதி தொம்பே பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பேலியகொடை பகுதியில் உள்ள பழைய பத்திரிகை மற்றும் கடதாசி அரைக்கும் ஆலையொன்றிற்கு இப்புத்தகங்களை வழங்கி 45 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஏற்கனவே ஆலையில் அரைக்கப்பட்டு, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
புத்தகங்களை விற்ற சாரதியும், கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.




