இலங்கை செய்தி

எனது மகனை காப்பாற்றுங்கள்: அனோஜனின் தாயார் கண்ணீர்மல்க வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை மன்னித்து விடுவித்துத் தருமாறு அவரது தாயார் சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை மன்னித்து விடுவித்துத் தருமாறு அவரது தாயார் சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்துப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பில், அசல் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தொலைபேசி ஊடாகத் தமது குடும்பத்தினருக்கு அனோஜன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளமையை அடுத்து, நற்பிட்டிமுனையில் உள்ள வீட்டில் தாயார் இந்தக் கண்ணீர்க் கோரிக்கையை ஊடகங்கள் மூலமாக முன்வைத்துள்ளார்.

“எனது மகன் செய்தது தவறுதான். அதனை மன்னித்து எனது மகனை விடுவித்துத் தாருங்கள். அதற்காகச் சவூதி அரேபிய அரசிடம் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட அரசினரும் நாட்டின் அனைவரும் உதவிடுங்கள். உங்களிடத்தில் கையெடுத்துக் கும்பிட்டு மடிப்பிச்சையாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

நான் பத்து மாதம் சுமந்து வளர்த்த எனது மகனை மீட்டுத் தாருங்கள். எனக்கு எதுவும் வேண்டாம், அவரை என்னிடத்தில் ஒப்படைத்தாலே போதுமானது. தயவுசெய்து மன்னிப்பளித்து அவரை எம்முடன் இணைத்து விடுங்கள்.” – என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் புலம்பெயர் தொழிலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கதிர்காம யாத்திரை தொடர்பான முகநூல் விவாதத்தில் இடம்பெற்ற கருத்துக்கள் நபிகளை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அவர் தன் தவறை உணர்ந்து சில நிமிடங்களுக்குள்ளேயே பதிவை நீக்கியதுடன், இஸ்லாமியச் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியும் காணொளியை வெளியிட்டிருந்தார்.

எனினும், கடுமையான இணையக் குற்றத் தடுப்புச் சட்டம் மற்றும் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அவருக்கு அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் தண்டனை வழங்கியிருந்தது.

அபராதத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில், குடும்பத்தினரும் பல்வேறு தரப்பினரும் தண்டனையைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுவதற்காக 18 இலட்சத்து 90 ஆயிரத்து 766 ரூபா சட்டக் கட்டணம் குடும்பத்தினரால் அமைச்சின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மரண தண்டனை விதிக்கப்பட்டது என அனோஜன் தொலைபேசியில் தெரிவித்தார் என்று அவரது சகோதரர் சிவராசா கம்சிகன் உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்,

“சட்ட உதவியை வழங்குவதற்காக அமர்த்தப்பட்ட சட்டத்தரணிக்கு பதிலாக வேறு ஒருவரே மன்றில் ஆஜராகியுள்ளார். அதற்கான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை.

ஆஜரான சட்டத்தரணி யார் என்பது குறித்த விவரங்களோ, தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளோ வெளிவிவகார அமைச்சிடமிருந்து கிடைக்கவில்லை.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இலங்கைக்கான சவூதி தூதரகமும் தமக்கு உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.” – என்றார்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசும், சவூதி அரேபிய அரசும் உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றித் தருமாறு அனோஜனின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் மீண்டும் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை