வளைகுடா பாதுகாப்புக்கு புதிய கூட்டணி: பாகிஸ்தான், துருக்கி, சவுதி கைக்கோர்ப்பு
மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் வெள்ளிக்கிழமை (07) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தங்கள் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இம்மூன்று நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.
இந்த சந்திப்பிற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் ஆகியோர் சவுதி அரேபியா சென்றுள்ளனர். இவர்கள் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கின்றனர்.
நேட்டோ (NATO) அமைப்பில் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட துருக்கி, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா மற்றும் இஸ்லாமிய நாடுகளில் ஒரே அணு ஆயுத வல்லரசான பாகிஸ்தான் ஆகிய மூன்று முக்கிய சன்னி முஸ்லிம் நாடுகளின் கூட்டாண்மை இதுவாகும்.
பாகிஸ்தான் ஏற்கனவே ஆயிரக்கணக்கான துருப்புகளையும், பாதுகாப்புச் சாதனங்களையும் சவுதிக்கு வழங்கி பாதுகாப்பு அளித்து வருகிறது. துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையேயும் வலுவான இராணுவ உபகரணப் பரிமாற்றங்கள் உள்ளன.
இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வமான விரிவான விவரங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.




