GSP+ வரிச்சலுகை இல்லாமல்போகும் அபாயம் – சஜித் எச்சரிக்கை
அரசாங்கத்தின் இயலாமையையும் திறமையின்மையையும் மூடி மறைப்பதற்காகவே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றன. இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்களால் ஜி.எல்.பி.பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போகும் அபாய் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (29) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், அடிப்படை உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட அரசாங்கத்தால் முறையாக நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறினார்.
எரிபொருள் விலைகள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வறுமையைக் குறைப்பது உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிறு, நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதாகக் கூறப்படும் சட்டமூலத்தின் மூலம் மக்களை அச்சுறுத்தி, அவர்களின் சிவில், மனித மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
குறித்த சட்டமூலத்தின் கீழ், பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதி தொடர்பான வரைவிலக்கணங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் செல்வது ஆபத்தானது எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சட்டங்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தி, சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்கள் அவசியமானவை என்றாலும், அவை சர்வதேச சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மனித உரிமை நியமங்களுக்கு அமைவாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக இலங்கைக்குக் கிடைக்கும் GSP+ வரிச் சலுகை இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆணை அரசாங்கத்தையோ கட்சி அலுவலகத்தையோ பலப்படுத்துவதற்காக அல்ல; மக்களின் இறையாண்மை, அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே வழங்கப்பட்டது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டுவராமல், அடிப்படை உரிமைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




