ஆஸ்திரேலியா உலகம் செய்தி

‘மரண விருந்தை’ ஏற்பாடு செய்த பெண் தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிப்பு

ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி, பிரிந்துவாழ்ந்த தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பெண்ணொருவர், தனது தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி, பிரிந்துவாழ்ந்த தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பெண்ணொருவர், தனது தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார்.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டிருந்தபிணையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

51 வயதான எரின் பேட்டர்சன் (Erin Patterson) என்பவர், கடந்த ஆண்டு தனது மாமனார், மாமியார் மற்றும் மாமியாரின் சகோதரி ஆகிய மூவரையும் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், நச்சுத்தன்மை கொண்ட ‘டெத் கேப்’ (Death Cap) காளான்கள் கலக்கப்பட்ட ‘பீஃப் வெலிங்டன்’ (Beef Wellington) என்ற உணவை அவர் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 33 ஆண்டுகளுக்கு பரோலில் விடுதலை பெற முடியாத வகையில் தண்டனை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட மிக நீண்ட சிறைத்தண்டனைகளில் இதுவும் ஒன்றாகும்.

எனினும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், மரணங்கள் தற்செயலாக இடம்பெற்றவை என்றும் எரின் பேட்டர்சன் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார்.

தனது வழக்கில் சில சாட்சியங்கள் விசாரணையின்போது அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது என்றும், குறுக்கு விசாரணை நியாயமான முறையில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேன்முறையீட்டில் வாதிட்டிருந்தார்.

மேலும், வழக்குடன் தொடர்புடைய ஏனைய தரப்பினரும் தங்கியிருந்த அதே ஹோட்டலில் நடுவர் குழுவினர் தங்க வைக்கப்பட்டமை, வழக்கின் தீர்ப்பைப் பாதித்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், இந்தக் காரணங்கள் மேன்முறையீட்டை ஏற்றுக்கொள்வதற்குப் போதுமானவை அல்ல என மூன்று நீதிபதிகளைக் கொண்ட விக்டோரியா உச்ச நீதிமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகளுக்குப் பரோல் மறுக்கப்படும் வகையில் விதிக்கப்பட்டிருந்த தண்டனைக் காலமும் போதுமானதல்ல எனக் குறிப்பிட்டு, அரசுத் தரப்பு தனியாக மேன்முறையீடு செய்திருந்தது.

குற்றங்களின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பரோலில் விடுதலை பெறுவதற்கான கால அவகாசமே வழங்கப்படக் கூடாது என அரசுத் தரப்பு வாதிட்டது.

இந்த மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு பரோல் பெறுவதற்கான வாய்ப்பை முற்றாக நீக்கியுள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சார்பில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஸ்டீபன் மெக்லீஷ் (Stephen McLeish),

“இந்தக் குற்றச்செயல்கள் மிகவும் குளிர்ந்த மனதுடனும், திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்டவை. இத்தகைய செயல்கள் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியவை” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்த வழக்கில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சியளிக்கும் குற்றச்செயல்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, பரோலில் விடுதலை பெறுவதற்கான காலப்பகுதியை நிர்ணயிப்பது பொருத்தமற்றது என விரிவான பரிசீலனையின் பின்னர் தீர்மானித்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று உயிர்களைப் பறித்த விஷ உணவு

கடந்த 2023ஆம் ஆண்டு மெல்பேர்னுக்கு தென்கிழக்கே சுமார் 135 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லியோங்கத்தா (Leongatha) நகரிலுள்ள தனது வீட்டில் மதிய உணவு விருந்துக்கு எரின் பேட்டர்சன் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்போது, தனது மாமியார் கேல் பேட்டர்சன் (Gail Patterson), மாமனார் டொனால்ட் பேட்டர்சன் (Donald Patterson) மற்றும் மாமியாரின் சகோதரி ஹீதர் வில்கின்சன் (Heather Wilkinson) ஆகியோருக்கு விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும், ஹீதர் வில்கின்சனின் கணவரான இயன் வில்கின்சனை (Ian Wilkinson) கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டிலும் எரின் பேட்டர்சன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். எனினும், அவர் அந்த உணவை உட்கொண்ட பின்னரும் உயிர் பிழைத்திருந்தார்.

அருகிலுள்ள மோர்வெல் (Morwell) நகரில் 11 வாரங்களாக இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணை, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகப் பல ஆவணப்படத் தொடர்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் புத்தகங்களும் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு அத்தியாயங்களைக் கொண்ட தொலைக்காட்சித் தொடரைத் தயாரிக்கவுள்ளதாக அமெரிக்காவின் Paramount+ ஒளிபரப்புத் தளம் இந்த வாரம் அறிவித்துள்ளது.

இதில், எரின் பேட்டர்சனின் கதாபாத்திரத்தில் நியூசிலாந்து நடிகை மெலனி லின்ஸ்கி (Melanie Lynskey) நடிக்கவுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி