சீனத் தூதுவருக்கு அழைப்பாணை விடுத்த பிலிப்பைன்ஸ்
சீன தூதுவரின் கருத்துகள் பலப்பிரயோகம் செய்வதற்கான மிரட்டலை வெளிப்படுத்துவதாகக் கூறி, அதற்கு தீவிர கவலையையும் கடும் எதிர்ப்பையும் தெரிவிப்பதற்காகப் பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சு, மணிலாவிலுள்ள சீனத் தூதுவரைத் திங்கட்கிழமை அழைத்து விளக்கம் கோரியுள்ளது.
பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சர் மரியா தெரேசா லசாரோ, சீனத் தூதுவர் ஜிங் குவானை அழைத்து, கடந்த வாரம் ஊடகங்களிடம் அவர் வெளியிட்ட கருத்துகள் “ஆத்திரமூட்டும் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும்” இருப்பதாகத் தெரிவித்தார் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸுடன் நேரடி மோதல் ஏற்பட்டால் சீனா எளிதில் வெற்றிபெறக்கூடும் என ஜிங் ஊடகவியலாளர்களிடம் கூறியிருந்தார். எனினும், “நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” என்பதால் சீனா பலப்பிரயோகத்தில் ஈடுபடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பிராந்தியத்தில் சீனா பிரச்சினைகளை ஏற்படுத்தும் நாடாகச் செயற்படுவதாகப் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சீனத் தூதுவர் இவ்வாறு கூறியிருந்தார்.
தென்சீனக் கடலில் தொடரும் பதற்றம்
அமெரிக்காவின் நட்பு நாடான பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர முரண்பாடுகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தென்சீனக் கடலில் இரு நாடுகளுக்கும் சொந்தமானதாகக் கருதப்படும் கடற்பரப்புகள் தொடர்பான உரிமைக் கோரிக்கைகளும், இரு நாடுகளின் கப்பல்களுக்கு இடையிலான நேரடி மோதல்களும் இந்தப் பதற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன.




