பிரான்ஸ் உள்துறை அமைச்சரின் ராஜினாமா கோரிக்கை நிராகரிப்பு
பிரான்ஸில் வார இறுதியில் பரவலாக இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்களைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் லோரான் நுனெஸ் Laurent Nunez முன்வைத்த இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
பொலிஸ் மற்றும் பாதுகாப்பு கட்டளைத் தொடர்பு பேணப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, லோரான் நுனெஸ் தனது பதவியில் தொடர வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய அணுகுமுறைகளை விரைவாக உருவாக்குமாறும் உள்துறை அமைச்சரிடம் அவர் கோரியுள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின. இதன்போது, நகரசபைக் கட்டடம் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு, பல கட்டடங்களின் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட குழுக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பல நகரங்களில் மோதல்கள் இடம்பெற்றன.
ஞாயிற்றுக்கிழமையும் பாரிஸ் மற்றும் மார்செய் நகரங்களில் மோதல்கள் வெடித்தன. வர்த்தக நிலையங்களைச் சூறையாடும் முயற்சிகளைத் தடுப்பதற்காகக் கலகத் தடுப்புப் பொலிஸார் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொதுச் சேவைகளின் தரம் வீழ்ச்சியடைதல் மற்றும் பாடசாலைகளின் நிலைமை ஆகியவை தொடர்பாகப் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.




