சுங்கத்துறையை ஏமாற்றிய நபர் – அரசாங்கத்திற்கு பாரிய நிதியிழப்பு
நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வது போல் பாசாங்கு செய்து, அமெரிக்க டொல்ர்களை நாட்டில் இருந்து வெளியே கடத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் அவர் சட்டவிரோதமாக 210 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக, வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை அம்பலப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி செயல்பட்டு வருவதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் இந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஜெஃப்ரி முகமது என்ற நபர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர் போல் நடித்து இந்த மோசடியை நடத்தியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அவர் மூலமாக, கொழும்பில் உள்ள முக்கிய சரக்கு இறக்குமதியாளர்கள் மோசடியாக டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, சரக்குகளை இறக்குமதி செய்து, அரசாங்கத்திற்கு பெரும் அளவிலான சுங்க வரிகளை இழக்கச் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்காக சந்தேக நபர் 36 படிப்பறிவில்லாதவர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளார் என்றும், சில வங்கி அதிகாரிகளிடமிருந்து அவருக்கு ஆதரவு கிடைத்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.
ஒரு அமெரிக்க டொலருக்கு இரண்டு ரூபாய் தரகுப் பணம் பெறுவதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியையும் பெற்றுள்ளனர்.




