பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு: கிளிநொச்சியில் பரபரப்பு
கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பொலிஸாரின் வீதித் தடையை மீறித் தப்பியோடிய சந்தேகநபர்கள் கைவிட்டுச் சென்ற பொதியிலிருந்து 14 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (02) இரவு முன்னெடுக்கப்பட்ட வீதித் தடுப்பு நடவடிக்கையின்போதே இந்தப் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிடுமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் நிறுத்தாமல் தப்பிச் சென்றதுடன், அவர்களில் ஒருவர் பொதியொன்றைக் கைவிட்டுச் சென்றுள்ளார்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோது, 14 சிறிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13.340 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1.62 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தப்பியோடிய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




