இணையவழி மோசடி – மரண தண்டனை விதிக்க தயாராகும் மியன்மார்!
இணையவழி மோசடி மையங்களில் வேலை செய்வதற்காக தொழிலாளர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்தல், வற்புறுத்துவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மியன்மார் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
தொடர்புடைய சட்டமூலம் இன்று மியன்மார் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
இந்த வரைவுச் சட்டம், “ஒருவரை இணையவழி மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக, அவருக்கு எதிராகச் செய்யப்படும் வன்முறை, சித்திரவதை, சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக்காவல், அல்லது கொடூரமான நடத்தை” ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகுக்கும்.
போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரில், இணைய மோசடி மையங்கள் பெருகியுள்ளன. அவை உலகெங்கிலும் உள்ள இணையப் பயனர்களைக் காதல் மற்றும் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடிகள் மூலம் குறிவைக்கின்றன.
பல பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்தக் கள்ளச் சந்தை, விருப்பமுள்ள பல ஊழியர்களை ஈர்க்கிறது.
ஆனால், நாடு திரும்பிய வெளிநாட்டினரும் மியான்மரில் உள்ள தளங்களுக்குக் கடத்தப்பட்டு, மோசடி நடவடிக்கையை தொடர்வதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





