இனவாதத்தை தூண்டுகிறது என்பிபி அரசு: நாமல் குற்றச்சாட்டு
“ இனவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் எனக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கமே இனவாதம் பரப்பிவருகின்றது. பெரும்பான்மையின மக்களை ஒடுக்கி தாங்கள் இனவாதிகள் அல்ல என ஏனைய இன மக்களிடம் காண்பிக்க முற்படும் அணுகுமுறை தவறானது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
“இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்கமாட்டோம் எனக் கூறிக்கொண்டு இந்த அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகின்றது. இந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள பௌத்த மக்களை மிதித்து, அதன்மூலம் தாங்கள் இனவாதிகள் அல்ல என ஏனைய இன மக்களுக்கு காட்ட முற்படுவது தவறு.
மகாசங்கத்தினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.
தயவு செய்து நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம். மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். சமூக அழுத்தமும் உள்ளது. எனவே, உரிய தீர்வை வழங்காவிட்டால் மக்கள் வீதிக்கு இறக்குவதை தடுக்க முடியாமல்போகும்.”- என்றார் நாமல் ராஜபக்ச.




